Monday, June 27, 2011

4 . பொன்னுலகாகும் பூவுலகம்.

மனித உயிர் - அது மகத்துவம் வாய்ந்தது.மனிதராய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும். குறையில்லா  மனிதராய்ப் பிறக்க 
மாபெரும் தவம் செய்திருக்கவேண்டும். அதைத்தான் அவ்வையாரும்' அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.அதனினும் அரிது கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அதனினும் அரிது தானமும் தவமும் செய்தல் என்று குறிப்பிட்டார்.
இத்தகைய உயர்ந்த மனிதப் பிறவி பெற்றிருந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்பது நாம் பெற்ற பெரும் பேறு என்றுதான் கொள்ள வேண்டும்.இப்படி உலகில் எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்தவரை வாழ்ந்தார் என இயம்பிவிட  இயலாது. உலகில் வாழ்வாங்கு வாழ்ந்தாரையே உண்மையில் வாழ்ந்தவராக உலகச் சான்றோர் குறிப்பிடுவர். அப்படி வாழ்பவர் மிகச் சிலரே.

"உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் 
 தமியர் உண்டலும் இலரே."எனப் புறநானூறு புகல்வதப் போல வாழ்ந்தவர்களும் பிறர்க்கென வாழ்ந்து தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தவர்களுமே உலகில் வாழ்ந்தவர்களாவர் எனப் புலவர் குறிப்பிடுவர். என்றும் வாழ்பவர்களும் இவர்களே.

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடிய பாரதியும் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என முழக்கமிடுகிறார்.
வள்ளுவரும்"
                       "இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக 
                         இவ்வுல கியற்றி யான்."  எனக் கூறுகிறார்.
இவ்வரிகள் நமக்கு எதனை உணர்த்துகின்றன? உலகில் பசித்துன்பம் இல்லாதிருக்க வேண்டும் என்பதையும் இருப்பவன் இல்லாதவனுக்களித்து அவன் பசியைப் போக்கவேண்டும் என்ற கருத்தையும் தெளிவாக்குகிறதன்றோ?

"எல்லோரும் வாழவேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்.நல்லோர்கள் எண்ணம் இது. இதுவே நல்லற வாழ்வு  " என்ற கவிஞனின் கூற்று நனவாக வழி வகுத்தலே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை." என்றான் வள்ளுவன்.
பகுத்துண்ணும் பண்பும் எல்லா உயிர்களையும் காக்கின்ற கருணையும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலவுமானால் அந்த நாடு விண்ணவர் நாட்டுக்கு இணையாக விளங்கு 
மென்பது சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

நம் பாரத நாடு பழம்பெரும் நாடு. ஞானத்திலே பரமோனத்திலே அன்னதானத்திலே உயர் மானத்திலே உயர்ந்த நாடு நமது பாரதம் . இங்கே பஞ்சமும் நோயும் பசியும் தீமையும் களையப்பட வேண்டுமெனில் நமது உள்ளங்களில் எல்லாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறிய வள்ளல் பெருமான் பயிர் வாடிய போது தன் உயிர் வாடியதாகக் கசிந்து உருகினார்.பயிர் நீரின்றி வாடுவதாக இருந்தாலும் அந்த வாட்டம் தன் உயிரையே வாட்டுவதாக எண்ணி வேதனைப் பட்டவர் அப்பெருமான்.

"தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென வாழுநர் உண்மையானே உண்டால் அம்மா இவ்வுலகம்." என்றான் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன்.
தமக்கென வாழாது பிறருக்காக வாழுகின்றவர் இருப்பதினாலேயே இவ்வுலகம் இன்னும் நிலை பெற்றுள்ளது என்கிறான். எனவே பிறர்க்கென  வாழும் உயர்ந்த பண்பு இவ்வுலகம் வாழ வழி வகுக்கின்றது.'வாழு வாழவிடு' என்ற தத்துவத்தின்படி வாழப் பழக வேண்டும் என்ற உண்மையை உணரவேண்டும்.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்." என்றார் சங்கக் கவி கணியன் பூங்குன்றனார். உலகம் முழுமையும் ஒன்று.சாதி, இனம், மதம், என்ற வேறுபாடுகள் அற்றது.என்ற கருத்தை 
அனைவரும் நம் உறவினர் என்ற ஒரு சொல்லிலே அடக்கிக் கூறினார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

மேல்நாட்டிலே இந்துமதக் கருத்துக்களைக் கூறச் சென்ற நம் நாட்டுத் தங்கம் விவேகானந்தரும் சகோதரர்களே, சகோதரிகளே! என அழைத்ததன்மூலம் இந்தஉண்மையையே  உறுதியாக்கிச் சென்றுள்ளார்.

உயர்ந்த மலையும் ஓங்கிய வானும் வீசும் தென்றலும், பரந்த கடலும் எப்படி ஒருவனுக்கே உரிமையுடையன அல்லவோ அதே போல் வாழும் உரிமையும் ஒருவனுக்கே சொந்தமல்ல. அனைவருக்கும் இந்த  உரிமை உண்டு என உணரவேண்டும்.

நாமும் வாழ்ந்து பிறரும்  வாழ வழி வகுப்பதே சீரான பாதை சிறந்த பாதை. இந்த உண்மையை உலகத்தார் அனைவரும் பற்றினால் இப்பூவுலகம் பொன்னுலகாய் மாறிவிடாதா?











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

1 comment: