Monday, July 25, 2011

அம்பது பைசா மகத்துவம்

அம்பது  பைசா  மகத்துவம் 

இரண்டு மாதங்களுக்கு முன்னால் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சிறியஸ்டேஷனில்  வண்டி நின்றது.ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தஎன்  முன் ஒரு பிஞ்சுக்  கை நீண்டது. "அம்மா ஏதானும் குடுங்கம்மா".என்ற குரலுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன இரண்டு கண்கள். நானும்என்  பையைத் துழாவிப் பார்த்தேன்.ஒரு ஐம்பது பைசாதான் இருந்தது. மீதி எல்லாம் நோட்டுக்களாக இருந்தன.அந்தச சிறுவனிடம்,
"இந்தாப்பா சில்லறை இல்லே. இதுதான் இருக்கு." என்றபடி அந்த நாணயத்தைக் கொடுத்தேன். அதைக் கையில் எடுத்துப்  பார்த்த அந்தப் பிச்சைக்காரன் பின்னர்  என்னைக் கூர்மையாகப் பார்த்தான். 
"இந்தாம்மா, இதை நீயே வச்சுக்க." எட்டணா நாணயம் இப்போது என் முன்னே சிரித்தது. எட்டணா நாணயத்தை விசிறியடித்த சிறுவன் அடுத்த பெட்டிக்குப் போய் விட்டான்.
அப்போது அந்த எட்டணாவின் மதிப்பு ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்பது என் நினைவுக்கு வந்தது.சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னே நான் பயணித்தேன்.எனக்கு அப்போது பதிமூன்று பதினான்கு வயது இருக்கும்.எங்கள் ஊர் தேனியில் வாரச் சந்தை நடக்கும்.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடும்.அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து வியாபாரிகள் தங்களின் விளைந்த பொருளைக் கொண்டு வந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பார்கள்.ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் இந்தச் சந்தையில்இருந்துதான்  பொருள் வாங்கி வருவார்கள். மளிகைசாமானில் இருந்து காய்கறி துணி வகைகளும் ஆடு மாடு வியாபாரம் வரை கூட இங்கு நடக்கும்.

எங்கள் வீட்டிலிருந்து சந்தைக்குச் செல்லும் நபர் நானும் எனக்குத் துணையாக என் தம்பியும்தான்.
அப்பா எட்டணாவை சில்லரையாக மாற்றித் தருவார். அம்மா இரண்டு பைகளைத் தருவார். ஒரு பையில் கிழங்கு வகை. மற்றதில் பச்சைக் காய்கள் என்று பிரித்துப் போட்டுக் கொண்டு வரச் சொல்லுவார்.நானும் தம்பியின் கைப்பற்றிக் கொண்டு சந்தைக்குச் செல்வேன்.அங்கு நான் வாங்கும் பொருள்களின் அளவும் விலையையும் கேட்டால் அது கனவுக் காலமோ என்று தோன்றுகிறது.
அந்த விலைப் பட்டியலை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
வெங்காயம் சின்னது...ஒரு வீசை அதாவது இப்போதைய ஒன்றரை கிலோ ஒன்றேகால் அணா (எட்டு பைசா)
உருளைக்கிழங்கு ஒன்றரை அணா. சேனை  பெரியது இரண்டு அணா.  சேப்பங்கிழங்கு முக்கால் அணா.(ஐந்து பைசா.)
இந்த அளவுகளில் பாதிதான் வாங்குவேன்.அதாவது இத்தனையும்  மூன்று அணாவில் முடிந்து விடும்.

அடுத்து பச்சைக் காய்கறி விற்கும் இடம் வருவோம்.எந்தக் காய் எடுத்தாலும் வீசை ஒன்றேகாலணா. வெண்டை, கத்தரி,  கோஸ்,பீன்ஸ் என்ற காய்களை ஒவ்வொன்றும் அரையணாவுக்கு வாங்குவேன்.மலையாகக் குவிந்திருக்கும் காய்களில் அளவு பார்க்காமல் தட்டு நிறைய அளந்து போடுவார் கடைக்காரர். அது ஒரு கிலோவாகவோ ஒன்றரைக் கிலோவாகவோ இருக்கலாம்.
நாட்டுக் காய்கள் விலை குறைவாக இருக்கும் ஆனால் கோஸ் பீன்ஸ் சற்றுக் கூடுதலாக  இருக்கும்.அவரை பீர்க்கு 
புடல் பாகல் காய்களெல்லாம் வீட்டு வாசலிலேயே காய்க்கும் அதனால் அவற்றை வாங்கவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது.

இந்தக் காய்கள் முழுவதும் ஆறு அணாவில் முடிந்திருக்கும். கையில் இன்னும் இரண்டணா இருக்கும்.பழங்கள் விற்கும் பகுதிக்குப் போய் ஒரு சீப்பு வாழை ஒரு அணாவுக்கும் 
ஒரு மடி இலை அதாவது ஐந்துவாழை  இலைகள் அரை அணாவுக்கு வாங்குவேன். இன்னும் இருக்கும் அரை அணாவுக்கு வரும் வழியில் அணாவுக்கு பதினாறு நுங்கு கிடைக்கும் எட்டு நுங்குகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவோம்.

தூக்க முடியாத கனத்துடன் வீட்டுக்கு வந்து அவற்றைத் தரையில் கொட்டுவோம்.ஒவ்வொரு காய்கறியைத் தனியாகப் பிரிக்கவே ஒரு மணி நேரம் ஆகும்.
 இப்படிப்பட்ட எட்டணாவை அந்தப் பிச்சைக்காரச் சிறுவன் எவ்வளவு அலட்சியப் படுத்திவிட்டான்.ஒருகாலத்தில் அந்த எட்டணா எவ்வளவு மதிப்புடன் இருந்தது.காலத்தின் கோலத்தால் அது மதிப்பிழந்து போய்விட்டாலும் என்னைப்போன்ற அனுபவம் உள்ளவர்கள் அதை மறப்பார்களா? மறக்கத்தான் முடியுமா?









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

No comments:

Post a Comment