Saturday, December 22, 2012

35-முடிவில்லாத கதை




பாட்டி சொல்லும் கதைகளை சிறுவர்களுக்கு அறிமுகப் படுத்திய சுட்டி விகடனுக்கு பாட்டியின் நன்றி.



சில புதிய கதைகளை சுட்டிகளுக்குச் சொல்லும் சந்தர்ப்பத்தை சுட்டிவிகடன் எனக்கு அளித்துள்ளதற்கு மிகவும் மகிழ்ச்சி.
சுட்டி விகடனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வலைதளத்தைப் படிப்பவர்கள் அதையும் கேட்டு மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அன்புப்பாட்டி,
ருக்மணி சேஷசாயி.


   35- முடிவில்லாத கதை.

ஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தான்.அவன் எப்போதும் ஏதேனும் புதிய புதிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் சபையில் கூறுவான். அந்த கருத்துகளால் மக்களும் மந்திரிகளும் சற்றுக் குழப்பமடைவார்கள்.அதனைத் தீர்த்து வைக்கப் பெரும் பாடு படுவார்கள். கடைசியில் அதைத் தீர்க்காமல் மன்னனிடம் தோற்று நிற்பார்கள். மன்னன் இவர்களின் தோல்வியைக் கண்டு மனதுக்குள் மகிழ்வான்.இப்படி ஒரு மன்னனைப் பெற்றதால் நாட்டின் முன்னேற்றமே நடக்கமுடியாமல் இருக்கிறதே என்று மந்திரிகளும் மக்களும் வருந்தினர்.
ஒருமுறை அந்த நாட்டிற்கு ஒரு புலவர் வந்தார்.அவர் மன்னரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.அந்த நாட்டு மன்னனைத் திருத்தி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என எண்ணினார்.அதனால் மன்னர் முன் வந்து நின்ற புலவர் "வணக்கம் மன்னர் மன்னா, தாங்கள் பல கேள்விகளைக் கேட்டு மந்திரிகளையும் மக்களையும் திணற அடித்துள்ளீர்கள். நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் விடை சொல்லிவிட்டால் என் தமிழப்புலமையைத் தங்களுக்கு அடிமையாக்குகிறேன். நீங்கள் தோற்றால் இந்த நாட்டு மக்களின் நலன் தவிர வேறு எதையும் சிந்திப்பதில்லை என வாக்குத் தரவேண்டும்" என்றான்.
மன்னருக்கு மகிழ்ச்சி. எங்கிருந்தோ வந்து என்னிடம் மாட்டிக் கொள்கிறானே என்று நகைத்தான்.அதனால் ,"எங்கே கேள் பார்ப்போம்"என்றான் கர்வத்தோடு.
"மன்னா, முடிவே இல்லாத கதையைச் சொல்லுங்கள்."
"என்ன, முடிவே இல்லாத கதையா?"
"ஆம் மன்னா, போதும் என்று சொல்லும் வரை கதை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் அப்படி ஒரு கதை சொல்ல முடியுமா தங்களால்?"
அரசன் யோசித்தான். தன கற்பனை மேல் அவனுக்கு அபார நம்பிக்கை."சொல்கிறேன் என்று ஆரம்பித்தான்.
ஆனால் அரசனால் மூன்று நாட்களுக்கு மேல் கற்பனை செய்ய இயலவில்லை.மிகவும் களைத்துவிட்டான். சோர்ந்துபோய் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.ஆனால் நீ அப்படி ஒரு கதையைக் கூறவேண்டும் அப்போதுதான் நீ வென்றதாகக் கொள்ள முடியும் என்றான்.
புலவன் கதை சொல்லத் தொடங்கினான்.
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான்.அவனிடம் பல காணி நிலம் இருந்தது. நல்ல செழிப்பான பூமி. மூன்று போகம் விளையக் கூடியது.அப்படி ஒரு முறை மூன்று போகம் விளைந்த நெல்லைக் கொண்டுவந்து  சேமிப்புக் கிடங்கில் கொட்டியிருந்தார்.அந்த மலைபோலக் கொட்டிக் கிடந்த நெல்லை ஒரு குருவி பார்த்தது இந்த நெல்லை நம் கூட்டுக்குக் கொண்டு பொய் விடவேண்டும் என்று அந்தக் குருவி நினைத்தது. உடனே பறந்து வந்து ஒரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்துவிட்டுத் திரும்பியது மீண்டும் பறந்து வந்து இன்னொரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.மீண்டும் பறந்து வந்து இன்னொரு நெல்லைத் தன மூக்கில் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.மூன்று நாட்கள் ஆகியும் அவன் நிறுத்தவில்லை இதே செய்தியை கூறிக் கொண்டே இருந்தான்.
"புலவரே நிறைய நெல்மணிகளைத் தான் கொண்டுபோய் விட்டதே  பிறகு என்ன அதைச் சொல்லுங்கள் என்றான் பொறுமை யிழந்து.
"இல்லை மன்னா, அந்த அம்பாரம் நெல்  முழுவதையும் அந்தக் குருவி கொத்திப் போகும் வரை சொல்லவேண்டும் அல்லவா?"
மன்னன் மிகவும் களைத்துவிட்டான். மந்திரி மார்களும் கூடியிருந்த மக்களும் தூங்கிவிட்டனர்.மன்னன் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.
அம்பாரம் நெல்லை ஒரு குருவி கொத்திப் போகும் வரை கதை சொல்லலாம் அதைக்  கேட்பது யார்?
தான் சொன்னபடியே தன நாட்டைக் கவனிப்பதாகவும் இனி அனாவசியமாக மந்திரிமாரையும் மக்களையும் சங்கடப் படுத்துவதில்லை என்றும் உறு திகூறினான் அந்த மன்னன்.
அத்துடன் நிறைந்த பரிசுகளையும்  அந்தப் புலவருக்குக் கொடுத்து அனுப்பினான் .மக்களும் நிம்மதி பெற்றனர்.






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

  1. சிறப்பான கதை. சுட்டி விகடனில் உங்கள் கதை - பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அம்பாரம் நெல்லை ஒரு குருவி கொத்திப் போகும் வரை கதை சொல்லலாம் அதைக் கேட்பது யார்?

    சுட்டி விகடனில் கதை சொல்வதற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete