Sunday, October 12, 2014

ராமனின் கோபம்

                                 ராமலக்ஷ்மணர்கள் வனவாசம் செல்லத் தயாராகி விட்டார்கள். சீதையும் பின்தொடர்கிறாள்.சீதை செல்லமாக ஆசையுடன் வளர்க்கும் கிளி அரண்மனை வாயிலில் இருந்த கூண்டுக்குள் இருந்தது.  நடக்கும் விபரீத நிகழ்ச்சிகளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.வனவாசத்திற்கு ஸ்ரீராமனுடன் புறப்படும் சீதாதேவி தான் வளர்த்துவரும் கிளியின் அருகில் வந்ததும் நின்றாள்.'கிளியை மிகுந்த அன்புடன் பார்த்தாள் . மிகுந்த வாத்சல்யத்துடன் கூறினாள்.                                                                                                                                                                                                                                             "என் உயிரையே உன்மேல் வைத்திருக்கிறேன்.நான் சீக்கிரமே திரும்பி வருவேன். அதுவரை ஜாக்கிரதையாக இரு." என்று கூறி விடை பெற்றாள்.                           சீதை கிளியிடம் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமனுக்குக் கோபம் வந்துவிட்டது.அவன் சீதையைப் பார்த்து சற்றே மனத் தாங்கலுடன் கூறினான்.
 "சீதே, சற்றுநேரம் முன்னர்தான் என் ப்ராணனே  நீங்கள்தான். தாங்கள் இல்லாமல் நான் ஒரு கணமும் உயிர் வாழமாட்டேன் என்று வாதாடினாய்..  மறு 
நிமிடமே கேவலம் ஒரு கிளியிடம் உன் பிராணன் இருப்பதாகக் கூறுகிறாய்.இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை." சற்றே சினத்துடன் கேட்ட மணாளனின் முகத்தைப் பார்த்த சீதை அச்சத்துடன் வாயடைத்து நின்று விட்டாள். 
அதைப் பார்த்த வசிஷ்டர் புன்னகையுடன் குறுக்கிட்டார்.
"ராமா, உன் அவதார ரகசியத்தை நினைத்துப் பார்.சீதை அந்த மகாலக்ஷ்மியின் அம்சம். அவள் கிளியிடம் பேசும்போது ஒருகால் வாயிலின் வெளியேயும் மற்றொரு கால் வாயிலுக்கு உள்ளேயும் வைத்துக் கொண்டு பேசினாள் .இதன் பொருள் என்னவென சிந்தித்தாயா.கிளியைக் காரணமாக வைத்து லக்ஷ்மி அம்சமான சீதை திரும்பி வரும்வரை அயோத்திக்கு லக்ஷ்மி கடாட்சம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால்தான் அந்தக் கிளியிடம் தன உயிர் இருப்பதாகக் கூறினாள்."       என்று கூறி ராமனை சமாதானப் படுத்தினார்.
உண்மையை உணர்ந்துகொண்ட ராமனும் சீதையின் அன்புக்கும் அறிவுக்கும் அகமகிழ்ந்து அவள் கரம் பற்றி வனத்தை நோக்கி நடந்தான். இளவலும் .பின்தொடர்ந்தான்..  

1 comment:

  1. மிகவும் அழகான ஸ்ரீராமன் சரித்திரம்...... படித்ததும் மனதுக்கு மகிழ்ச்சியளித்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete